தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-09-19 03:57 GMT

 வெப்ப அலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 23 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் மதுரையில் இதுபோல வெயிலின் அளவு அதிகரித்துள்ளது இதுதான் முதல்முறை என்று கணிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் 102 டிகிரி, அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், ஈரோடு, கரூர், பரமத்தி,திருச்சி, தஞ்சாவூர், சென்னை 100 டிகிரி, திருத்தணி, வேலூர், சேலம் 99 டிகிரி வெயில் நிலவியது. செப்டம்பர் மாதத்தில் இதுபோல வெயில் அதிகரிப்பது அரிதான நிகழ்வு என்று வானிலை ஆய்வாளர்கள் ெதரிவிக்கின்றனர். குறிப்பாக கடல் பகுதியில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பநிலை அதிகரித்து வீசுவதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், இதன் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நீடித்து வருவதால் இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும். சென்னையில் இன்றும் நாளையும், 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் தமிழக கடலோரப் பகுதிகளில் 22ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதியில் தெற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags:    

Similar News