பள்ளிகள் திறக்கும் நாளிலேயே பாடப் புத்தகங்கள்
பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆட்சியில்தான் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில் சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்.நிதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.
மேலும் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும், பல சாதனையார்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
வர உள்ள கூட்டத்தொடரில் மாணவர்களுக்கு பல நல்ல புதிய அறிவிப்புகள் வரும், பெற்றோர்கள் கஷ்டத்தை நீங்கள் உணர வேண்டும், நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல சாதனைகளை நீங்கள் புரிய வேண்டும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும், வகுப்பறையில் படிப்பது மட்டும் பாடம் இல்லை விளையாட்டு மைதானத்தில் சொல்லி கொடுப்பதும் பாடம் தான் என தெரிவித்தார். நேற்று கூட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.
கடந்த ஆட்சியில் 6 மாதம் முதல் 11 மாதம் வரையில் காலதாமதமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இரண்டு மூன்று மாதங்கள் காலதாமதம் ஆனது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் பொழுதே மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் மாணவர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார். ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் அவர்களின் அறிவுரைகளை கேட்டு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.