அடுத்தடுத்து சறுக்கிய அதிமுக.. அறைகூவல் விடுத்த ஓபிஎஸ்!

Update: 2024-06-06 06:37 GMT

ஓபிஎஸ்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம்,  போட்டியிட்டார். இதில், தி.மு.க கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, ஓ.பன்னீர்செல்வத்தைவிட 1,66,782 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ஜ.க கூட்டணியில் பலாப்பழ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 வாக்குகளும் பெற்றனர்.

அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும், தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடம் பிடித்தனர். அதிமுகவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் நான்காம் இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியமாகும். `தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாகுவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:    

Similar News