விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவு பெறும்

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவு பெறும்” என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

Update: 2024-01-25 06:58 GMT

மத்திய அமைச்சர் வி.கே.சிங் 

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் நேற்று நடந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய தரைவழி நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் நலத்திட்டங்களின் முழு பலன்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மத்திய அரசின் நோக்கம். விளம்பரத்திற்காக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழக முதல்-அமைச்சர் குற்றம்சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன். மத்திய அரசு களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது.  வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்து இயங்கினால் மட்டுமே வாகனம் சிறப்பாக ஓடும்.  அதேபோல் மத்திய- மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும்.

ராமர் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம். அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. யாரும் ராமரை வைத்தோ, ராமர் கோவிலை வைத்தோ அரசியல் செய்ய வேண்டாம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சில இடையூறுகள் இருந்த நிலையில் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் விமான நிலையம், முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

Tags:    

Similar News