மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ .3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2023-11-08 07:20 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் பணி மாறுதல் பெற்று சென்னைக்கு செல்ல உள்ள நிலையில் நேற்றுடன் இவர் பதவிக்காலம் நிறைவடைகிறது இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றுக் கொண்டு பல்வேறு முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தீடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறைகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சோதனையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளரிடம் இருந்து கணக்கில் வராத 13,000 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மாடர்ன் நகரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சால்வன் துரை மற்றும் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். மேலும் மாவட்ட கல்வித்துறையில் பணியாற்றும் சாணக்கியன் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் திருச்செல்வராஜா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.