அவதூறு வழக்கில் ஆஜரானார் இபிஎஸ் - வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு எதிரான அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு ஜூன் 27 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-15 01:57 GMT
அவதூறு வழக்கில் இபிஎஸ் ஆஜரானார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரான நிலையில், வழக்கின் விசரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்பி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் அதிமுக சார்பில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டதட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை’ என்று தெரிவித்தார். உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பியுள்ளார். மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று தயாநிதி மாறன் தெரிவித்து இருந்தார். 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்வதாக தெரிவித்து இருந்தார்.

மேலும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் சுமார் ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம்தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்திற்கு மேல் என் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்துள்ளேன். 17 கோடி ரூபாய் என் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. அதைக் கொண்டு என் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளேன். எனவே, அவதூறு பரப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், ஐயப்பன் ராஜ் அதிமுக தரப்பில் ஆஜராகி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்குக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் வழக்கு ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஜூன் 27 ஆம் தேதி இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அடுத்த கட்ட விசாரணையில் அதிமுக தரப்பு வாதங்கள் தகவல்கள் முன்வைக்கப்படும். சட்ட ஆலோசனைக்கு குழுவுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிமுக தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி அளித்தார்.

Tags:    

Similar News