மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும் - அமைச்சர் ரகுபதி
மாநில அரசு கணக்கெடுப்பு எடுக்கலாம் என்று சொன்னாலும், அதை மத்திய அரசு திருத்தி எழுதும் அதிகாரம் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உண்டு. மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்பொழுது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில் அந்த சமுதாயத்தை சார்ந்த கல்வி ,வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு , ஆகிய தரவுகளை ஆராய்ந்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றது. தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி பாரதிதாசன் கமிஷனுக்கு, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற தரவுகளை அரசிடம் இருந்து வழங்கப்பட்டு விட்டது.
பொருளாதார மேம்பாடு குறித்து சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் புள்ளி விவரம் தரமுடியும். சாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுக்க வேண்டும். எனவே 2021 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்து, அதோடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். 2008 ஆம் ஆண்டு சட்டத்தின் படி மாநில அரசு கணக்கெடுப்பு எடுக்கலாம் என்று சொன்னாலும் இதை மத்திய அரசு திருத்தி எழுதும் அதிகாரம் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உண்டு. மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும், அதனால் தான் ஒன்றிய அரசையே வலியுறுத்துகிறோம் என்று பேசினார்.