தனியார் நிதி நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க ஆணையம் உத்தரவு!

தனியார் நிதி நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-05-19 14:29 GMT

தனியார் நிதி நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சார்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் நான்கு சக்கர வாகனம் வாங்க திருநெல்வேலியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார். அதற்காக தனது வாகனத்தின் பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி. புத்தகத்தை அடமானமாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் சிவசுப்பிரமணியம் இறந்து விட்டதால் கடனுக்கான முழுத் தொகையையும் அவரது குடும்பத்தினர் செலுத்தி விட்டனர். கடன் தொகை செலுத்தப்பட்ட பின்னர் தடையில்லா சான்றிதழ், ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை திருப்பித் தர கேட்டுள்ளனர். ஆனால் தனியார் நிதி நிறுவனம் அவற்றை வழங்க மறுத்துள்ளது. பல நாட்களாகியும் முறையான பதில் வராததால் மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஆர்.சி.புத்தகம், தடையில்லா சான்றிதழ், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆகியவற்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News