சிறு,குறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஈஸ்வரன்
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 27.12.2023 அன்று மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்து பெருவாரியான தொழில் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறார்கள். சிறு, குறு தொழில் நிறுவனங்களில் தற்போதைய நிலைமையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்றி இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நடத்தப்படுகின்ற இந்த போராட்ட கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலித்து தொழில் நிறுவனங்களையும் அதை சார்ந்திருக்கின்ற தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்.
GST பிரச்சனைகள், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள், உலக நாடுகளின் பொருளாதார மந்த நிலை சிறு, குறு தொழில்களை வெகுவாக பாதிக்கின்ற சூழ்நிலையில் மின்சார கட்டண நடைமுறைகளில் வந்த மாற்றமும் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை எதிர்பார்த்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தொழிற்சாலைகள் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்களை நடத்திய வரலாறு கிடையாது. எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்துக் கொண்டு நிறுவனங்களை இயக்கி வந்தவர்கள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள் என்றால் கள நிலவரத்தையும், பாதிப்பின் வீரியத்தையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சிறு, குறு நிறுவன அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக தீர்வுகளை காண வேண்டும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்ற நிலைமையை கண்கூட காண முடிகிறது. மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்ற சிறு, குறு நிறுவனங்களை மேலும் அடுத்த கட்ட போராட்டங்களை தொடர விடாமல் பேச்சுவார்த்தை நடத்தி அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்