சாலைவிபத்தி உயிரிழந்த சிறுவன் -உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்
சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த உடலுக்கு அமைச்சர் ஆர் காந்தி மலர் வளையம் வைத்து பெற்றோரிடம் இருகரம் கும்பிட்டு கண்ணீர் மல்க இரங்கல் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அருள் - பரிமளா ஆகிய தம்பதியர்களின் இரண்டாவது மகனான ராகவேந்திரா வயது (13) கடந்த 18-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ராகவேந்திரா மூளைசாவு ஏற்பட்டது.
ராகவேந்திராவின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவமனைக்கு சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் இறுதி நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கள் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது இதனையடுத்து சிறுவனின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து அரசின் ஆணையின்படி அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று அவரது உடலுக்கு பூ மலர் வளைய வைத்து அரசு மரியாதை செலுத்தினார்கள். மேலும், உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்களை கூப்பி தலை வணங்கி கண்ணீர் வீட்டு மரியாதை செய்தார்.