தமிழக சட்டசபை திங்கட்கிழமை கூடுகிறது; கவர்னர் உரை தயாரிப்பு பணிகள் நிறைவு!!
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூட உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. மேலும் கவர்னர் உரையை வாசிப்பதற்கு ஏற்ப சட்டசபை மையப் பகுதியில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நாளை மதியத்துக்குள் நிறைவுபெறும் என்று தெரிகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை கவர்னர் உரையாற்றுவதற்கான குறிப்புகள் இறுதி வடிவம் பெற்று உள்ளன. அவற்றை அச்சிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கவர்னர் உரையில் சில அறிவிப்புகள், சாதனை விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்ற விவரம் திங்கட்கிழமை தெரியவரும். அநேகமாக 4 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.