மலர் கண்காட்சி முடிந்தும் அதிக கட்டணம் வசூலிக்கும் தோட்டக்கலை துறை!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கருகி கலை இழந்த பூக்களை பார்க்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஏப்ரல், மே ஆகிய கோடை சீஸனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி நடத்தப்பட்டது. கடத்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்ற மலர் கண்காட்சி 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நேற்று நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்களால் ஆன டிஸ்னி வேர்ல்ட் , மலைரயில் என பல்வேறு உருவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கமான நாட்களில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மலர்கண்காட்சிக்காக பெரியவர்களுக்கு ரூ. 150, சிறுவர்களுக்கு ரூ. 100 என உயர்த்தப்பட்டது. நுழைய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பெரியவர்களுக்கான கட்டணம் மட்டும் ரூ. 125 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மலர் கண்காட்சி முடிந்தும் நேற்று எந்தவித அறிவிப்பும் இன்றி பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- சென்னையிலிருந்து தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா வந்தோம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது. மலர் கண்காட்சி முடிந்து விட்டதால் கட்டணம் குறைந்திருக்கும் என்று நினைத்தோம் நுழைவு கட்டணம் ரூ.100 வசூலிக்கின்றனர். மலர்கண்காட்சி முடிந்த பிறகும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. ஒருவர் இருவர் என்றால் கட்டணத்தை தாங்கிக் கொள்ளலாம் ஆனால் 10 முதல் 15 பேர் பேர் ஒரு குடும்பத்திலிருந்து மொத்தமாக வரும் சமயத்தில் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும். மலர்கண்காட்சிக்கு கட்டணம் வசூலித்தது சரிதான் கண்காட்சி முடிந்த பிறகு அதிக கட்டண வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே உடனடியாக கட்டணத்தை குறைக்க வேண்டும். எந்தவித அரசு அறிவிப்பும் இல்லாமல் கட்டண உயர்வு எப்படி நடைமுறையில் உள்ளது என்பது எங்களை ஆச்சரியப்படுத்துகிறது. இதேபோல் தாவரவியல் பூங்காவில் உடைந்து கிடக்கும் கழிப்பறை கதவுகள், தண்ணீர் இல்லாத குழாய்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டணம் மற்றும் கூடுதலாக இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவிலும் இதே போல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது சுற்றுலா பயணிகளுக்கு சுமையாகவே இருக்கிறது. இதற்கு தோட்டக்கலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளிர் கோரிக்கையாக உள்ளது.