அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?: பா.ம.க. போராட்டத்தை சுட்டிக்காட்டி நீதிபதி கேள்வி!!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன் என பா.ம.க. போராட்டத்தை சுட்டிக்காட்டி நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமக-வினரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது பேசிய நீதிபதி, போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அரசியலாக்குவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் என்று தெரிவித்தார்.