வெளிநாட்டில் இறந்தவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய எம்எல்ஏ
வெளிநாட்டில் இறந்தவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர பாபநாசம் எம்எல்ஏ உதவினார்.;
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, அய்யம்பேட்டை நியூ டவுனைச் சேர்ந்தவர் முருகானந்தம் (60). பஹ்ரைன் நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 9 ஆம் தேதி இதய நோய் காரணமாக அங்கேயே இறந்து விட்டார்.
இறந்த அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது மனைவி கோமதி பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பஹ்ரைன் நாட்டில் செயல்படும் தமிழ் அமைப் புகளை சேர்ந்த சுதீர், பொன்னுசாமி மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் அயலக பிரிவான இந்தியன் வெல்பேர் அமைப்பின் பஹ்ரைன் தலைவர் யூசுப் ஆகியோரின் முயற்சியால், பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக முருகானந்தம் உடல் விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தது.
சென்னை விமான நிலையத்திலிருந்து எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா ஏற்பாடுச் செய்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை வந்தடைந்தது. தொடர்ந்து முருகானந்தத்தின் குடும்பத்தினர் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர்.
இறந்த முருகானந்தத்தின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சி செய்த பஹ்ரைன் தமிழ் அமைப்புகள், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.