ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது
ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனையை தடுக்க ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் அருகில் கஞ்சா விற்பனை ஒழிக்கப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
அப்படி இருந்தும் தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே போலீஸார் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்றார் போல் பல இடங்களிலும் கஞ்சா விற்பனைக்கு போலீஸார் உதவி செய்து வந்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (29). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர், தற்போது நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஊட்டி மேற்கு காவல் ஆய்வாளர் மீனாபிரியா, மகளிர் காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையிலான காவல்துறையினர் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த சவுந்தரராஜனிடம் காவலர்கள் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலலித்துள்ளார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் நீலகிரிக்கு பணிக்கு வந்த கடந்த 4 மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். நீலகிரியில் காவலரே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான சவுந்தரராஜனை பணியிடை நீக்கம் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இவர் யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார் என்பது குறித்தும் இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சேரம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த உடையார் செல்வம் (27), எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த அமரன் (24), ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் பணிபுரிந்த விவேக் ஆகிய 3 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.