காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி நகை பறித்த போலீஸ்காரர்!
தூத்துக்குடியில் காதல் ஜாேடியை செல்பாேனில் வீடியோ எடுத்து மிரட்டி நகை பறித்த போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் மதிய நேரங்களில் பெரும்பாலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும். அந்த நேரங்களில் இளைஞர்கள் சிலர் ஆர்வமாக கடற்கரைக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். பின்னர் காதல் ஜோடியிடம் சென்று வீடியோ பதிவு செய்து இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டினாா்.
பின்னர் அந்த நபர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டார். மறுநாள் அந்த பெண்ணின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரை, பூங்காக்களில் மர்ம நபரை தேடினார். முத்துநகர் கடற்கரையில் அந்த நபர் நிற்பதை பார்த்து பிடிக்க முயன்றனர். இதை அறிந்த அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்று விட்டாா். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை வாலிபர்கள் மீட்டு தூத்துக்குடி வடபாகம் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பயன்படுத்தியது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும், அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்படுவார்’ என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.