நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச பெண் வெட்டி கொலை
நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த பெண் வெட்டி கொலை - போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-20 09:16 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி( 49). திருமணம் ஆனவர். இவர் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பம்பு செட் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மோட்டாரை நிறுத்துவதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். அப்போது நிலத்துக்கு செல்லும் வழியில் ஜெயலட்சுமி கழுத்தை அறுத்தும், வயிற்றில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் அங்கு சென்று ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ஜெயலட்சுமி கழுத்தில் தாலி சரடு, செயின் என 5 சவரன் நகை அணிந்துள்ளார் . அந்த நகைகள் காணவில்லை. மேலும் அவரது காதில் ஒரு கம்மல் மட்டும் உள்ளது. இன்னொரு கம்மல் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பட்ட பகலில் நகைக்காக பெண் கழுத்தை அறுத்தும், வயிற்றில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலீசார் மோப்பநாய் சாராவை அழைத்து வந்து கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர் . அப்போது மோப்பநாய் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என சோதனை நடத்தினர். பட்டப் பகலில் நகைக்காக பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.