வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Update: 2024-04-01 06:27 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் முதற்கட்டமாக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர், முகவர்களின் கையேடு உள்பட பல்வேறு பொருட்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடியில் 70-கும் மேற்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அனைத்து பொருட்களும் விரைவில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்து வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.