ஆளுநருக்கு திருக்குறள் பேரவை கண்டனம்
அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்த வேண்டாம் என ஆளுநருக்கு திருக்குறள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் உடைகளை காவி வண்ணத்திற்கு உடை மாற்றம் செய்வதற்கும் அவருக்கு திருநீர் அணிவிப்பதற்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலில் எந்த உரிமையும் இல்லை என்பதை அவர் அறிய வேண்டும் என தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை கண்டித்துள்ளது.
இதுகுறித்து திருக்குறள் பேரவை செயலாளர் பழ.மாறவர்மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "உலகத்திற்கும், எல்லா காலத்திற்கும், எல்லா சமயத்தவர்க்கும், எல்லா இனத்தவருக்கும் வாழ்வியல் நூலை வழங்கியவர் திருவள்ளுவர். உலகம் போற்றும் பேரறிஞர். " வெல்லாததில்லை, திருவள்ளுவர் வாய் வினைத்தவற்றுள் பொல்லாதது இல்லை. புரைதீர்ந்த வாழ்வில் அழைத்துச் சொல்லாததில்லை. பொதுமறையான திருக்குறளில் இல்லாததில்லை, இணையில்லை, முப்பாலுக்கு இந்நிலத்தே" என்பது பாவேந்தர் வாக்கு. பல்லாண்டுகளாக அய்யன் திருவள்ளுவரை தமிழர்கள் அனைவரும் தெய்வப்புலவராக கொண்டாடி வருகின்றோம், பொய்யாமொழியார் என்றும் வணங்கி வருகின்றோம்.
அப்படிப்பட்ட தெய்வப்புலவரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யன் திருவள்ளுவர் ஆடைகளுக்கு காவிச் சாயம் பூசி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது கண்டிக்கத்தக்கது. அய்யன் திருவள்ளுவர் பிறந்தநாள் தை இரண்டாம் நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து, இந்நாள் வரையில் தை இரண்டாம் நாளில் திருவள்ளுவர் பிறந்த நாள் என்று உலகம் கொண்டாடி வருகின்றது. நீங்கள் தமிழ்நாடு ஆளுநராக இருந்தாலும் எங்கள் அய்யன் திருவள்ளுவருக்கு நீங்கள் தவறான உடை உடுத்தி அவரை ஒரு சமயப்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. இந்த செயல்பாடு தமிழர்களின் உரிமைகளில் தலையிடுவதாக தெரிகின்றது. வடக்கு இருந்து வந்த உங்களுக்கு தமிழர்களின் உரிமைகளில் தலையிட எந்த உரிமையும் இல்லை. ஆதலால் தாங்கள் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
எந்த உரிமையில் நீங்கள் இந்த செயலை செய்திருக்கின்றீர்கள் என்றும் எங்களுக்கு புரியவில்லை. அமைதி பூங்கா வகை இருக்கும் தமிழ்நாட்டில் ஆளுநர் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொழுது உங்களுக்கென்ன எங்கள் தமிழ்நாட்டின் மீது அக்கறை? சட்டம் ஒழுங்கு முறையாக நடப்பதற்கு தாங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர எங்களுடைய பண்பாடு கலாச்சாரத்தை பாராட்ட வேண்டுமே தவிர திருக்குறளில் உள்ள பெருமைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர திருவள்ளுவருக்கு தெய்வப் புலவருக்கு காவி உடை அணிவித்திருப்பது ஒரு சமயத்திற்கு அடையாளப்படுத்துவது மிகவும் வேதனை தருகின்றது. தஞ்சாவூர் உலக திருக்குறள் பேரவையினர் தங்கள் செயல் மிகவும் வருந்தத்தக்கது என்று பதிவு செய்கின்றது. தாங்கள் இது போன்ற செயல்களை செய்யாமல் அய்யன் திருவள்ளுவரின் பெருமையை உலக அரங்கத்திற்கு பறைசாற்றும்படி கேட்டுக் கொள்கின்றோம். எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக தாங்கள் செயல்படுவது சரியில்லை.
எந்த ஆதாரத்தை வைத்து இது போன்ற செயல்களை தாங்கள் செய்கின்றீர்கள் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. இது போன்ற செயல்களை ஆளுக்காள் செய்தால் என்னவாகும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தியாகும். அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்த வேண்டாம். உலக அரங்கில் பெருமை படுத்துவோம். உலகத் தமிழர்கள் அனைவரின் சார்பாக தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மிகுந்த வருத்தத்தையும் ஆழ்ந்த கண்டனத்தையும் தமிழக ஆளுநருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். சாதி சமயமற்ற அய்யன் திருவள்ளுவர் உலக அரங்கிற்கு பொதுவானவர். பிறப்புக்கும் எல்லா உயிர்களுக்கும் என்று அய்யன் திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லியிருக்கின்றார். அப்படி இருக்க அவரை சமயப்படுத்தி இருப்பது மிகவும் வருந்ததற்குரியது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.