திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தமிழ்கடவுளான முருக கடவுளின் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அறுபடைவீடுகளுள் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வருகிறது சூரனை முருகப்பெருமான் வதம் செய்த இடமான திருச்செந்தூரில் கடந்த 13ம்தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் வருகை தந்து விரதம் இருந்து வந்தனர். தினசரி யாகசாலை பூஜை நடைபெற்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆணவத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து அழிக்கும் நிகழ்ச்சியே சூரசம்ஹாரம் ஆகும். மாலை யாகசாலை பூஜைகள் முடிந்து சுவாமி ஜெயந்திநாதர் வேல்வகுப்பு, வாள்வகுப்பு பாடல்கள் முழங்க சுவாமி கடற்கரை திடலில் எழுந்தருளினர்.முதலில் யானை உருவில் வந்த கஜமுக சூரனை எதிர்த்து போரிட்ட ஜெயந்திநாதர் வதம் செய்து அழித்தார். இதை தொடர்ந்து சிங்கமுக உருவில் வந்த சூரனையும் பின்னர் நிஜ உருவில் வந்த பத்மசூரனைம் அழித்து வெற்றி வாகை சூடினார் இதை தொடர்ந்து சேவல் உருவில் வந்த சூரனை வதம்செய்து அழித்ததும் சுவாமியை கடற்கரை திடலில் உள்ள சந்தோசம் மண்டபத்திற்கு கொண்டு சென்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது.தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி நீர் ஆகாரம் மற்றும் உணவுகளை உண்டு தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மாவட்ட காவல் துறையினர் முழு அளவில் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்த தமிழக அறநிலையத்துறைக்கும் தமிழக முதல்வருக்கும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் முரளிதரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். என பக்தர்கள் தெரிவித்தனர்.