1.20 கோடியில் பள்ளி கழிப்பிடம் … அசத்தும் ரெப்கோ!!
அரசுப்பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் நவீன மற்றும் தரமான கழிப்பறைகளை கட்டிக் கொடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.;
RHFL
அரசுப்பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் நவீன மற்றும் தரமான கழிப்பறைகளை கட்டிக் கொடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கும் அல்லது அது சுகாதாரமாக இருக்காது என்ற நிலையே தொடர்கிறது. இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் சிரமத்தை போக்க ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தூய்மை மற்றும் நவீன கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள சுமார் 12 அரசு பள்ளிகளுக்கு 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிஎஸ்ஆர் நிதி உதவியின் கீழ் ’தமிழ்நாடு அரசின் நம்ம ஊர் நம் பள்ளி திட்டம் மூலம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தரமான கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளது.
இதுமட்டுமில்லாமல் குடிநீர் வசதிக்காக கிணறு வெட்டிக் கொடுத்தும், பள்ளிக்கென தனியே மேடை அமைத்தும் கொடுத்துள்ளது. தேவாலா வாழவயல் நடுநிலை பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இதனை ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் ரெப்கோ வீட்டுக்கடன் வசதி நிறுவன தலைவர் தங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்படி, நாடுகாணியை அடுத்துள்ள பொன்னூர், தேவாலா, வாளவயல், கரிய சோலை, கொளப் பள்ளி, உப்பட்டி புஞ்சை வயல் மற்றும் குந்தலாடி உள்ளிட்ட ஏழு அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.
மேலும் வாளவயல் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியசூண்டி, ஆரூற்றுப்பாறை, மரப்பாலம், கூடலூரை அடுத்த கோழிப்பாலம், இரண்டாவது மைல் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் வீட்டுக்கடன் வசதி நிறுவன தலைவர் தங்கராஜ் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர்.
அப்போது, தாயகம் திரும்பியோர் அதிக அளவில் படிக்கும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேலும் பல அடிப்படை வசதிகள் வரும் காலத்தில் செய்து கொடுக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வசதிகளை மாணவ மாணவியர் பயன்படுத்தி அவற்றை சுத்தமாக பேணுவது அவசியம் என்று தெரிவித்தனர். இதுமட்டுமின்றி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஊக்குவித்தனர்.
அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களை இழந்த தாயகம் திரும்பியவர்களின் குழந்தைகளின் முழுமையான, அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான கல்வி செலவுகளை ரெப்கோ வங்கியே ஏற்றுக்கொள்ளும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.