ரோஜா பூங்காவுக்கு படை எடுத்த சுற்றுலா பயணிகள்!

ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.;

Update: 2024-05-12 12:39 GMT

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை வலியுறுத்தி ரோஜா கண்காட்சியில் அலங்காரங்கள் இடம்பெறும். இந்த ஆண்டு வன விலங்கு பாதுகாப்பை வலியுறுத்தி 80 ஆயிரம் ரோஜாக்களால் யானை, காட்டுமாடு, கரடி, புலி, மான் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரோஜா கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் ரோஜா பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் வார விடுமுறை தினம் என்பதால் இன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து ரோஜா பூங்கா களை கட்டியது. இதேபோல் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜா பூங்காவில் விற்பனை செய்யப்பட்ட ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

ஊட்டியில் இன்று காலை முதலே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழைக்கு மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத்தலங்களுக்கு படை யெடுத்தனர். இதனால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகரின் பல இடங்களிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News