சுற்றுலா பயணிகள் நாளை முதல் தொட்டபெட்டா செல்ல அனுமதி!
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச் சிகரம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, மாநில எல்லைகள், அணைகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லும் வழியில் இருந்த சேதனைச் சாவடியில் வாகனத்திற்கான நுழைவு கட்டணம் செலுத்திய பிறகே வாகனங்கள் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு அனுமதிக்கப்பட்டன.
இந்த சோதனைச்சாவடி, ஊட்டி - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வனத்துறையினர் இந்த சோதனைச்சாவடியில் ( பாஸ்ட் டேக் ) முறையை தமிழகத்திலேயே முதல் முறையாக நடைமுறைப்படுத்தினர். இருந்தும் போக்குவரத்து பாதிப்பு குறையவில்லை. இதையடுத்து வனத்துறையினர் பாஸ்ட் டேக் இருக்கும் இடத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி வைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்த வாரம் தொடங்கினர்.
தற்போது 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மழை நின்ற பின்னர் தான் மற்ற பணிகளை செய்ய முடியும் என்பதால், சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.