தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலையை பொறுத்தவரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு சிற்றாறு-I (கன்னியாகுமரி) 4, சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 1 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 3° - 3.5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.
உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33° – 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° – 29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.4° செல்சியஸ், சேலத்தியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மதுரை நகரம், திருச்சி, நாமக்கல், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம், பாளையம்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. செ
ன்னை நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையைப் பொறுத்தவரை, தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 7 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 8 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும். அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.