மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் ஆய்வு

மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும், வெள்ளபாதித்த இடங்களையும் நிதியமைச்சர் பார்வையிட்டார்

Update: 2023-12-27 01:10 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நண்பகல்12 மணியளவில் வந்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது பாதிப்பு விவரங்களை அவரிடம் அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதிகளிலும், கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும், திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோனியார் புரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக கூடுதல் வருவாய் செயலர் பிரபாகர் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News