எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் காலி இருக்கைகள்
துறையூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள், தொண்டர்கள் எழுந்து சென்றதால் இருக்கைகள் காலியாக இருந்தன.
திருச்சி மாவட்டம், துறையூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். அரியலூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு துறையூருக்கு சரியாக எட்டு மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்ற தொடங்கினார்.
சுமார் 20 நிமிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கேட்டு சலிப்படைந்த கட்சி தொண்டர்கள்,பொதுமக்கள் எழுந்து நடையை கட்டத் தொடங்கினர். இதனால் இருக்கைகள் எல்லாம் காலியாக கிடந்தது. மேடையின் முன்புறம் நின்றிருந்த சொற்ப தொண்டர்கள் மத்தியில் உரை ஆற்றிய எடப்பாடி பழனிச்சாமி , மத்திய அரசு மற்றும் மாநில அரசை குறை கூறியும், சாடியும் பேசினார். பின்னர் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பார்த்து படித்தார்.முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் போதே தொண்டர்கள் சாரை சாரையாக எழுந்து சென்றதால் பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுக்கூட்ட மேடையில் எடபாடி பழனிசாமி பேசும்போது கூட்டணி கட்சியின் தலைவர்கள் பெயரை உச்சரிக்காதது கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே சங்கடத்தை ஏற்படுத்தியது.