வைகாசி விசாகத் திருவிழா : 5 இடங்களில் வாகன நிறுத்துமிடம்

திருச்செந்தூா் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக 5 இடங்களில் வாகன நிறுத்தமிடம் அமைக்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-20 02:45 GMT

எஸ்பி பாலாஜி சரவணன் 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 22 ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவுக்கு அதிகப்படியான வாகனங்கள் திருச்செந்தூருக்கு வரும் என்பதை உத்தேசித்து மாவட்ட காவல்துறை அறிவுரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் தனியாா் ஒருங்கிணைப்புடன் வாகன நிறுத்தம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் நகா்ப்புறத்தில் கோயிலுக்கு மிக அருகில் பக்தா்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூா் நகராட்சி மூலம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள நூலகத்துக்கு எதிராக நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 400 கனரக வாகனங்கள் நிறுத்துமிடம், திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமாா் 500 காா் மற்றும் வேன்கள் நிறுத்துமிடம், திருச்செந்தூா் நீதிமன்றத்துக்கு எதிரே தனியாா் மற்றும் செந்தில் முருகன் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான சுமாா் 6 ஏக்கா் இடத்தில் சுமாா் 1,300 வாகனங்கள் நிறுத்துமிடம், திருச்செந்தூா் புதிய வட்டாட்சியா் அலுவலகம் எதிராக வட்ட காவல் நிலையத்துக்கு மேற்கு பக்கமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமாா் 700 வாகனங்கள் நிறுத்துமிடம், திருநெல்வேலி ரோடு அனைத்து வியாபாரிகள் சங்கம் அருகே உள்ள திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 15 ஏக்கா் இடத்தில் சுமாா் 2,500 வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டு வருகிறது.

எனவே, திருச்செந்தூருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தான்குளம், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் பக்தா்கள் மேற்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News