வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்
வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், எந்திர வாக்குபதிவு முறையை தடை செய்ய வேண்டும் என கூறி விசிகவினர் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குநரும், விசிக மாநில பொறுப்பாளருமான சிபிசந்தர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஈ.வி.எம். இயந்திர வாக்குபதிவு முறையை முற்றிலுமாக ஒழித்து பழைய வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும், தமிகழகத்தில் வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடராக அறிவித்து உடனடியாக வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும், ரத்தினகிரி நந்தியாலம் பகுதியில் இசுலாமிய, கிறித்துவ சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.