தனியார் தொழிற்சாலையில் தொட்டி நீரை பருகிய 50பேருக்கு வாந்தி, மயக்கம்
தனியார் தொழிற்சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை பருகிய 50 ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருவள்ளூரில் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை பருகிய 50 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
திருத்தணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 50 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கேபேட்டை அடுத்த வேலன்கண்டிகை பகுதியில் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் 1000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு அருந்திய பின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரை பருகியுள்ளனர். அதன் பின்னர் அவர்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிப்பட்டு திருத்தணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஆர்கேபேட்டை போலீசார் மற்றும் சுகாதாரதுறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மருத்துவமனைகள்மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோரின் வருகை அதிகரித்திருப்பதால் மருத்துவமனை வளாகத்திலும் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.