உப்பளங்களில் தேங்கிய நீர் - வடிகால் அமைக்க கோரிக்கை

காளவாசல் பகுதியில் மழைநீர் மற்றும் கடல் நீர் உப்பளங்களில் தேங்கி இருப்பதால் சுமார் 200 ஏக்கர் உப்பளங்கள் பாதிப்படைந்து, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கடல் நீர் பூகாத வண்ணம் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-05 09:06 GMT

உப்பளங்கள் 

தூத்துக்குடி காளவாசல் மற்றும் அலங்கார தட்டு பகுதியில் 200 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உப்பளங்களை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மழை வெள்ளநீர் இந்த உப்பள பாத்திகளின் வழியாக சுவாமி விவேகானந்தர் காலனி கடல் பகுதிக்கு வெட்டி விடப்பட்டது.

தற்போது அந்த ஓடை வழியாக உப்பள பாத்திகளில் வெட்டி விடப்பட்ட மழை நீர் முழுமையாக வடியாமல் உப்பள பாத்திகளில் தேங்கியுள்ளது. மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் பெருக்கெடுத்து கடல் நீரும் உப்பளங்களில் அதிக அளவு உட்புகுவதால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உப்பள பாத்திகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கடல் நீரை அகற்றி முறையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News