அதிமுக ஆட்சியில் என்ன சீரழித்தோம்: இபிஎஸ் கேள்வி
திருச்சி உழவர் சந்தையில் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திருச்சியில் அதிமுக வேட்பாளா் கருப்பையாவை ஆதரித்து,
எடப்பாடி கே. பழனிசாமி இன்று தென்னூா் உழவா் சந்தை பகுதியில் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் 2ஜி ஊழல்.அதிமுக ஆட்சியில் என்ன சீரழித்தோம் என்பதை சொல்லுங்கள் அதற்கு நாங்கள் உரிய பதிலை சொல்கிறோம்.
கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என கூறி திமுக ஏமாற்றிவிட்டது. திமுக ஆட்சியில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை 40 சதவீதம் உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத தமிழக முதல்வர் 'நீங்கள் நலமா' என தொலைபேசியில் மக்களிடம் நலம் விசாரிக்கிறார்.
கவர்ச்சிகரமான பொய்களை பேசிப் பேசி மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி என்று திமுக சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பல ஆயிரம் பெண்களுக்கு திருமணம் நடக்க காரணமாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனைத் திட்டமிட்டு திமுக அரசு நிறுத்திவிட்டது. கடன் வாங்குவதில், போதைப்பொருள் புழக்கத்தில், ஊழல் செய்வதில் திமுக அரசு நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்றார்.
மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை மாா்ச் 24ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவா், மீண்டும் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதில் அதிமுக தொண்டா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உற்சாகம் அடைந்துள்ளனா்.