தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ''இன்னும் டைம் இருக்கு.. '' - அண்ணாமலை பதில் !
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.
லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லியில் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். ''அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம்'' என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.