நீலகிரி மலைப்பாதையில் பேருந்தை வழிமறித்த யானைக் கூட்டம்!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை கெத்தை மலைப்பாதையில் 2வது நாளாக அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே கோவைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மலைப்பாதையில் ஆறு யானைகள் கொண்ட கூட்டம் சுற்றித் திரிவதால் அரசு பேருந்துகள் உட்பட மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று 16 வது கொண்டை ஊசி வளைவில் முகாமிட்டிருந் காட்டு யானைகளால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் அந்த யானைக் கூட்டம் அரசு பேருந்தை வழி மறித்தன. நீண்ட நேரம் சாலையின் நடுவே நின்றிருந்த யானைகள் அரசு பேருந்து செல்ல வழிவிடாமல் சாலை ஓரத்தில் இருந்த மண்ணை எடுத்து உடல் மீது வீசியவாறு நின்றன. இதனால் அரசு பேருந்து உட்பட அந்த சாலை வழியாக பயணித்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபட்டன.
இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் காட்டு யானைகள் வாகனங்கள் செல்ல வழிவிட்டன. அதனை தொடர்ந்து வாகனங்கள் சென்றன. இதனையடுத்து மலைப்பாதையில் யானை கூட்டம் அடிக்கடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.