சூழல் காற்று, கனமழை எச்சரிக்கை - கரை திரும்பும் நாகை மீனவர்கள்
மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று புதிதாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள்- ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழக கடற்கரையில் டிச.16 முதல் டிச.18 வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் சுழல் காற்று வீசக்கூடும் மற்றும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அடிப்படையில் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மூன்று தினங்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள் இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், காமேஸ்வரம், புஷ்பவனம், ஆற்காட்டு துறை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு விசைப்படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரம் கட்டி வைக்கும் பணியிலும் வலைகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை ஓர கிராமங்களில் சுமார் 650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் சுமார் 3300 க்கும் மேற்பட்ட பைபர்,படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.