மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு தம்புல்லாவில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - தாய்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தாய்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தாய்லாந்து தரப்பில் பூச்சாதம் 40 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரபேயா கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 97 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேசம் 17.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 100 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.