சேலம் அருகே பைக் குறுக்கே நாய் பாய்ந்ததால் தொழிலாளி சாவு
சேலம் அருகே பைக் குறுக்கே நாய் பாய்ந்ததால் தொழிலாளி பலியானார்.;
கோப்பு படம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூலையூர் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (46) கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர் முத்துசாமி என்பவர் உடன் மோட்டார் சைக்கிள்களில் சென்றார். மோட்டார் சைக்கிள் பொட்டனேரி சாந்தா திருமண மண்டபம் அருகே சென்ற போது திடீரென ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது.
இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள்களில் இருந்து இருவரும் கீழே விழுந்ததில் வைத்தீஸ்வரன், முத்துசாமி ஆகிய இரண்டு பேரும் காயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த வைத்தீஸ்வரன் வலி தாங்காமல் கதறினார்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் இரண்டு பேரையும் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வைத்தீஸ்வரன் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.