நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வரலாம்

நீலகிரி மாவட்டத்திற்கு செல்போன் மூலம் எளிதாக இ-பாஸ் பெற்று வரலாம் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஊட்டியில் பேட்டியளித்தார்.

Update: 2024-05-11 02:19 GMT

நீலகிரி மாவட்டத்திற்கு செல்போன் மூலம் எளிதாக இ-பாஸ் பெற்று வரலாம் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஊட்டியில் பேட்டியளித்தார்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த தமிழக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று 126-வது மலர்க்காட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இன்று தொடங்கிய இந்த ஊட்டி மலர்க்காட்சியானது வருகிற 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் 6.5 லட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. இந்தாண்டு நடைபெற்று வரும் ஊட்டி மலர்க்காட்சியினை ஏறக்குறைய 3.5 லட்சம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலர்க்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகள் இ-பாஸ் பெறுவது குறித்த எவ்வித தயக்கமும், அச்சமும் அடைய வேண்டாம். மிகவும் எளிதான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கும் எளிதான முறையில் இ-பாஸ் பெற்று தரும் வகையில் சோதனை சாவடிகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இ-பாஸ் நடைமுறை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ் பெறுவதற்கு எந்தவொரு அலுவலகத்தையோ, அலுவலரையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஆட்டோ ஜெனரேட் முறையில் எளிமையாக இ-பாஸ் கிடைத்து விடும். மிகவும் எளிதான முறையில் இ-பாஸ் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்பெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு எந்தவொரு தயக்கமுமின்றி சுற்றுலா தளங்களை பார்வையிட வருகை தரலாம். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களது கைப்பேசி வாயிலாக கூட இ-பாஸ் பெற்று வருகை தரலாம். இவ்வாறு அவர் கூறினார். ......

Tags:    

Similar News