சிறுமியை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தால் பரபரப்பு !
ஜெயங்கொண்டத்தில் சிறுமியிடம் 1 1/2 லட்சம் பணம் பறித்து, மேலும் பணம் கேட்டு கொடுக்க மறுத்த சிறுமி போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-28 07:26 GMT
அரியலூர், மார்ச்.28- ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவியை மிரட்டி காதலிப்பதாக கூறி பணம் பறித்தும், மேலும் பணம் கேட்டு போட்டோவை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய வாலிபரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ் என்பவரது மகன் அஜய் (20) இவர் ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் பயிலும் பதினோராம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும் கூறி பழகி சிறுமியிடமிருந்து ரூ1.5 லட்சம் பணமும் 2 1/2 பவுன் நகை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை போட்டோ எடுத்து வைத்திருப்பதாகவும் அதை மார்பிங் செய்து இணையத்தில் (சமூக வலைதளங்களில்) வெளியிடுவதாகவும் கூறி மிரட்டி மீண்டும் ரூ 15 ஆயிரம் ரொக்கம் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் 1098 எண்ணிற்கு போன் செய்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களை வரவழைத்து நடந்ததை கூறியுள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி (அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பொறுப்பு) வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டிய அஜய் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை மிரட்டி பணம் பறித்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.