மை நிரப்பும் பேனா உருவானது எப்படி ?

Update: 2024-05-01 10:16 GMT

மை நிரப்பும் பேனா

பறவைகளின் இறகு பேனாவாகப் பயன்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பவுண்டன் பேனா வடிவமே உபயோகத்துக்கு வந்தது. லூயிஸ் வாட்டர்மேன். என்பவர் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தார். இவர் அமெரிக்காவின் ஓர் இன்சூரன்ஸ் நிறுவன சேல்ஸ்மேன் ஆவார். முதலில் வடிவமைக்கப்பட்ட பவுண்டன் பேனா எப்படி இருந்தது தெரியுமா? மையை அடைத்து வைக்க ஏதுவாக, கடினமான ரப்பரால் செய்யப்பட்ட குழாயும், அதன் அடியில் 'நிப்'பும் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வகை பவுண்டன் பேனாவால் மென்மையாக காகிதத்தில் எழுத முடியாமல் போனது. இந்தப் பேனாவை வைத்து எழுதியதால்,மை தாறுமாறாகக் கொட்டி வாட்டர்மேனின் மதிப்பு மிக்க இன்சூரன்ஸ் ஒப்பந்தப் பத்திரங்களெல்லாம் வீணாகின. அதனாலேயே வாட்டர்மேனுக்கு ஒரு சூப்பர் பேனா உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாகத் தோன்றியது. அப்படி அவர் வடிவமைத்ததுதான் சரியாக எழுதக்கூடிய பவுண்டன் பேனா. பழைய பவுண்டன் பேனாவின் நிப்பில் ஒரு துளை மற்றும் வேண்டிய இயந்திர நுட்ப வசதிகளைச் சேர்ப்பது தான் அவரது எண்ணமாக இருந்தது. அதைச் செயல்படுத்திப் பார்த்தார். பவுண்டன் பேனா உருவானது.

வாட்டர்மேன் கண்டுபிடித்த பவுண்டன் பேனா மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது. நிப், அதன் அடியில் பொருத்தப்படும் கருப்புக் கட்டை, இந்த இரண்டையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறு உருளை ஆகியனவாகும். எல்லா பேனாக்களும் ஒரு மை நிரப்பிக் கொள்ளும் கலனை முக்கியமாகக் கொண்டுள்ளன.

லூயிஸ் வாட்டர்மேன் தனது முதல் (நன்கு எழுத ஏதுவான) பவுண்டன் பேனா கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1884-இல் பதிவு செய்தார்.

அதற்கு முன்பே 1702-ஆம் ஆண்டு 'எம். பயான்' என்ற பிரெஞ்சுக்காரர் பவுண்டன் பேனாவை வடிவமைத்தார்.

பேனா தயாரிப்புக்காக முதல் அமெரிக்கக் காப்புரிமையை, 'பியரி கிரீன் வில்லியம்சன்' என்பவர் 1809-ல் பெற்றார்.

பாதி இறகாலும், பாதி உலோகத்தாலும் தயாரிக்கப் பட்ட பேனாவுக்காக, 1819-ல் பிரிட்டிஷ் காப்புரிமையை 'ஜான் செப்பர்' என்பவர் பெற்றார்.

1831-இல் மை நிரப்புவதற்காக தானே உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுள்ள பவுண்டன் பேனாவை ஜான் ஜேக்கப் பார்க்கர் என்பவர் கண்டுபிடித்தார். இவர் பெயல் உருவான பார்க்கர் நிறுவன பேனாக்கள் மிகவும் பிரபலமடைந்தன.

Tags:    

Similar News