வட அமெரிக்காவில் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித் தடங்கள்!
நியூ மெக்சிகோவிலுள்ள வெண்மணல் தேசிய பூங்காவில் இரு ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட மனித காலடித் தடங்கள், சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என அறிவிக்கப்பட்டபோது எழுந்த பெரும் விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது, வேறு இரு முறைகளில் இந்தக் காலடித் தடங்களின் காலம் கணிக்கப்பட்டதில் ஏற்கெனவே கணிக்கப்பட்ட காலத்தையொட்டியே, ஏறத்தாழ ஒரேமாதிரியாக வரும் நிலையில், முந்தைய காலக் கணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கருதப்பட்டதைவிடவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே வட அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்திருப்பதாக இவை உறுதி செய்கின்றன.
“உள்ளபடியே இந்தக் காலடித் தடங்கள் எவ்வளவு பழமையானவை என்பதற்கான பதில் மிகவும் சிக்கலானது” என்று குறிப்பிடுகிறார் இந்த ஆய்வில் பங்கு பெறாதவரான ஓரெகன் மாகாணப் பல்கலை தொல்லியல் வல்லுநர் லோரன் டேவிஸ்.
இப்போது நியூ மெக்சிகோ நகராக மாறிவிட்ட - ஒருகாலத்தில் பழைமையான ஏரியாக இருந்த - அதன் கரையில் பதிந்திருந்த 60-க்கும் அதிகமான மனித காலடித் தடங்களை, 2021 ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.