இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனம்!
இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு Pegasus Spyware தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதுதான் பெகசஸ் ஸ்பைவேர் செயலி. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனம், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரது தொலைப்பேசியையும் ஒட்டுக் கேட்பதற்காக இச்செயலி பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு ஸ்மார்ட் போனை கண்காணிக்க முதலில் அந்த போனில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டர் பாதுகாப்பு விதிமுறைகளைத் தாண்டி அந்த போனுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன் பயனாளர் வேறு ஒரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாளும் பின்னணியில் தன்னையறியாமலே தனது ஸ்மார்ட் போனில் பெகசஸ் ஸ்பைவேர் செயலியை பதிவேற்றம் செய்ய அது வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த செயலி பதிவேற்றமான பிறகு பயனாளரின் அனுமதியின்றி அந்த போனில் உள்ள பயனாளரின் சோசியல் மீடியா உட்பட அனைத்து பாஸ்வேர்ட்கள், வங்கி தகவல்கள், கேலண்டர் நிகழ்வுகள், அனைத்து வகை வாய்ஸ் கால் மற்றும் மெசேஜ்கள் என அனைத்தையும் கண்காணித்து தரவிறக்கம் செய்து அச்செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள சர்வர்களுக்கு அது அனுப்பிவிடுகிறது.
மேலும், பெகசஸ் செயலியானது, தொலைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் இயக்கும் வல்லமை பெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிர்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மேற்கொண்ட 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பெகாஸஸ் உளவு மென்பொருளும், ஏவுகணை அமைப்பும் இடம்பெற்றுள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சில ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆப்பிள் போன் மற்றும் ஐபேட்டை பயன்படுத்துவோரின் சாதனங்கள் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் அல்லது ஐபேட் கட்டுப்பாட்டைப் இழந்து தகவல்களை திருடி அவர்களுக்கு அளிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் மாதத்தில் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Cert-In) ஐபோன் மற்றும் iPad க்கான ஆப்பிளின் OS -ல் பல பாதிப்புகள் இருப்பதை கோடிட்டு காட்டியது.
ஐபோன் மென்பொருளின் 17.4.1 iOSக்கு முன்புள்ள வெர்சனில் சஃபாரி வெப் பிரௌசர்களில் குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஸ்பைவேர் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 2023ல் ஆப்பிள் நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அவர்களின் சாதனங்களில் "அரசால் ஆதரவு பெற்ற" ஸ்பைவேர் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.