வங்கதேச நீதிபதிகளின் இந்திய பயிற்சி திடீர் ரத்து!!
வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்துள்ளது. இடைக்கால அரசின் பொறுப்பில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகின்றனர். சிறுபான்மை இந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றர். இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் சுமார் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கதேச அரசின் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து இந்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையில், வங்கதேச நீதிபதிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.