புரூனே சுல்தானின் சொத்து மதிப்பு இவ்வளவா!

Update: 2024-09-05 10:00 GMT

புரூனே சுல்தான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்ற புரூனே நாட்டின் சுல்தான், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக உள்ளார். 7 ஆயிரம் கார்கள், ஆயிரத்து 700 படுக்கை அறைகள் கொண்ட பிரம்மாண்ட அரண்மனை, சரணாலயம் என பிரமிப்பூட்டும் சுல்தானின் சொத்துக்கள்..

நாம் அதிகம் அறிந்த இங்கிலாந்து மன்னர் குடும்பத்துக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் புரூனே சுல்தான் ஹஸனல் போல்கியா. அதே சமயம், புரூனே நாட்டின் 29ஆவது சுல்தானான ஹஸனல் போல்கியா அளவுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட அதிக ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து இருக்கமாட்டார்கள் என்றே கூற வேண்டும்.

சுமார் நான்கரை லட்சம் மக்கள் தொகை கொண்ட உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று புரூனே. இந்நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பங்கு, இயற்கை எரிபொருள் மற்றும் எண்ணெய் வளத்தில் இருந்து கிடைத்துவிடும் நிலையில், பொதுமக்கள் யாரும் சேவை வரி, வருமான வரி என எந்த வரியும் கட்டுவதில்லை. தனிநபர் வருமானமே இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம் ரூபாயாம்.

பொதுமக்களே இவ்வளவு வசதி வாய்ப்பாக உள்ள நிலையில் நாட்டின் பிரதமர் அந்தஸ்தில் உள்ள சுல்தான் ஹஸனல் போல்கியாவை சொல்லவா வேண்டும். இவரின் வாழ்விடம், கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்திற்கு ஈடாகாது என்று கூறப்படுகிறது.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், இவர் சிகை திருத்தம் செய்துக் கொள்ள மட்டும் இந்திய மதிப்பில் 13 லட்சம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், வெளிநாடுகளில் சிறந்த சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வந்து லட்சக்கணக்கில் கட்டணம் கொடுத்து தன்னை அழகூட்டிக் கொள்கிறாராம்.

யோசித்துக் கூட பார்க்கமுடியாத அளவிற்கு சுமார் ஏழாயிரம் கார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அறுநூறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களாம். இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார் போல்கியா. இவரின் கார்களின் மதிப்பு மட்டுமே 41 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.

நானூற்று ஐம்பது ஃபெராரி கார்கள், முன்னூற்று எண்பது Bentley கார்கள், நூற்று அறுபத்தி மூன்று கோயனிக்செக் கார்கள், பதினோரு மெக்லாரன் எப் 1 எஸ் கார்கள், லம்போர்கினி, மெர்சிடீஸ்-பென்ஸ், ஜாகுவார்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களும் ஹஸனல் போல்கியா வசம் உள்ளன. 24-காரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II, ஹஸனல் போல்கியாவின் தனித்துவமான கார்கள் சேகரிப்பில் முக்கியமானவை. சுல்தான் 2007இல் தனது மகள் இளவரசி மஜீதாவின் திருமணத்திற்காக தங்கம் பூசப்பட்ட இந்த காரை வாங்கினார்.

இது மட்டுமின்றி, தங்கத்தால் இழைக்கப்பட்ட 747-400 ஏர் ஜெட், ஏர் பஸ் 340-200 போன்ற ஆடம்பர பிரைவேட் ஜெட்டுகளையும் வைத்துள்ளார். மேலும், 1980களில் இவர் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடமும் வகித்தார். பிறகு 1990இல் அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸிடம் இந்த இடத்தை பறிகொடுத்தார்.

சுல்தான் ஹஸனல் போல்கியாவின் இன்றைய சொத்து மதிப்பு 2 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சுல்தான் போல்கியாவின் அரண்மனை, உலகின் மிகப்பெரிய குடியிருப்பு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இது சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் 22 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனையில் ஐந்து நீச்சல் குளங்களும், 1,700 படுக்கையறைகளும், 257 குளியல் அறைகளும் உள்ளதாக சொல்லப்படுகிறது. சேமிப்புக்காக மட்டும் 110 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சுல்தானின் பொழுதுபோக்கிற்காக மட்டும் ஒரு தனியார் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் 30 வங்கப் புலிகள், பல்வேறு பறவை இனங்கள் உள்ளன.

மத்திய தரைக்கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று வாயடைக்க வைக்கும் சுல்தானின் சொத்துக்கள் ஏராளம். லண்டனில் அவருக்கு மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது.

Tags:    

Similar News