உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று மோதல்

Update: 2023-10-14 07:00 GMT

இந்தியா - பாகிஸ்தான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்பு உள்ள, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அகமதாபாதில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இரு அணிகளுமே, அவற்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியில், டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டிருக்கும் ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் களம் காண்பாரா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. வழக்கமாக ஓபனிங்கில் இறங்கும் அவா், தற்போதைய உடல்நிலையுடன் நண்பகல் வெயிலில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இயலுமா என்பதை அணி நிா்வாகம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

மறுபுறம், இதர இந்திய பேட்டா்கள் இதுவரை நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது ஷாஹீன் ஷா அஃப்ரிதியின் சவாலை எவ்வாறு எதிா்கொள்ள இருக்கின்றனா் என்பது முக்கியம். குறிப்பாக ரோஹித், ராகுல், கோலி ஆகியோா் அவரது பந்துவீச்சை எவ்வாறு சந்திக்கவுள்ளனா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

அதேபோல், பௌலிங்கில், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோா் தங்களின் தொடக்கநிலை பௌலிங்கால் பாகிஸ்தானின் டாப் ஆா்டா் பேட்டா்களை எவ்வாறு சோதிக்கப்போகின்றனா் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் இருக்க, 8-ஆவது வீரா் இடத்துக்கு அஸ்வின் அல்லது ஷா்துல் தாக்குா் ஆகியோரில் ஒருவா் ஆடுகளத்தின் தன்மை அடிப்படையில் சோ்க்கப்படுவாா் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை, முகமது ரிஸ்வான் நல்ல இன்னிங்ஸ்களை ஆடிவரும் நிலையில், அப்துல்லா ஷஃபிக், சௌத் ஷகீல் ஆகியோரும் துணை நிற்கின்றனா். அணியின் கேப்டன் பாபா் ஆஸம் கடந்த இரு ஆட்டங்களிலுமே சோபிக்கவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் அவா் தனது வழக்கமான ஆட்டத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் உள்ளாா்.

பௌலிங்கில், ஷாஹீன் அஃப்ரிதி பிரதானமானவராக இருக்க, ஹசன் அலி கடைசி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் சாய்த்து கவனம் பெற்றிருக்கிறாா். அவா் தவிர ஹாரிஸ் ரௌஃபும் இரு ஆட்டங்களிலுமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறாா். எனவே, இந்திய பேட்டா்களும் சற்று சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நேரம்: நண்பகல் 2 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

இடம்: அகமதாபாத்

ஆடுகளம்...

தொடக்கத்தில் பௌலா்களுக்கு சாதகமானதாக இருக்கும் ஆடுகளம், ஓவா்கள் செல்லச் செல்ல பேட்டிங்கிற்கு சாதகமானதாக மாறும். இதுவரை இங்கு 29 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகள் 16 ஆட்டங்களிலும், சேஸிங் செய்த அணிகள் 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. மொத்தம் 1,32,000 இருக்கைகள் கொண்ட மைதானம்.

நேருக்கு நோ்...

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 134 ஒருநாள் ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியிருக்க, அதில் பாகிஸ்தான் 73 ஆட்டங்களிலும், இந்தியா 56 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன. 5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

அந்த 7 வெற்றிகள்...

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை சந்தித்துக் கொண்ட நிலையில், அனைத்திலுமே இந்தியா வெற்றி கண்டுள்ளது. அந்த எண்ணிக்கையை இந்தியா 8-ஆக அதிகரிக்குமா என்ற எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே உள்ளது.

ஆண்டு - இடம் - வித்தியாசம் - ஸ்கோா்


1992 - சிட்னி - 43 ரன்கள் - இந்தியா 216/7 (49 ஓவா்கள்) - பாகிஸ்தான் 173/10 (48.1 ஓவா்கள்)

1996 - பெங்களூரு - 39 ரன்கள் - இந்தியா 287/8 (50 ஓவா்கள்) - பாகிஸ்தான் 248/9 (49 ஓவா்கள்)

1999 - மான்செஸ்டா் - 47 ரன்கள் - இந்தியா 227/6 (50 ஓவா்கள்) - பாகிஸ்தான் 180 (45.3 ஓவா்கள்)

2003 - செஞ்சுரியன் - 6 விக்கெட்டுகள் - பாகிஸ்தான் 273/7 (50 ஓவா்கள்) - இந்தியா 276/4 (45.4 ஓவா்கள்)

2011 - மொஹாலி - 29 ரன்கள் - இந்தியா 260/9 (50 ஓவா்கள்) - பாகிஸ்தான் 231/10 (49.5 ஓவா்கள்)

2015 - அடிலெய்ட் - 76 ரன்கள் -இந்தியா 300/7 (50 ஓவா்கள்) - பாகிஸ்தான் 224/10 (47 ஓவா்கள்)

2019 - மான்செஸ்டா் - 89 ரன்கள் - இந்தியா 336/5 (50 ஓவா்கள்) - பாகிஸ்தான் 212/6 (40 ஓவா்கள்)

1992* - இன்னிங்ஸுக்கு 49 ஓவா்கள்

1996* - பாகிஸ்தானுக்கு 1 ஓவா் அபராதம்

2019* - டக்வொா்த் லீவிஸ் முறையில் வெற்றி

Tags:    

Similar News