மீண்டும் தோல்வியில் முடிந்த ஜப்பான் ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம்!!
ஜப்பான் ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது. தனியார் நிறுவனத்தின் ராக்கெட் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஸ்பேஸ் ஒன் நிறுவனம் உருவாக்கியுள்ள கெய்ரோஸ்-2 ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா மலைப்பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது. அந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் சிறிது நேரத்தில் கைவிடப்பட்டது. ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்தோம் என ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி ஏவப்பட்ட ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெய்ரோஸ்-1 ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.