வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 87.சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் (VVPAT) ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4.6.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொதுப்பணித்துறையினர் தேவையான தடுப்புகள் (barricade), மின்னாக்கி (Generator), தேவையான மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். திருச்செங்கோடு நகராட்சி மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர் மற்றும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான கணினி, இணையதள வசதி உள்ளிட்ட வசதிகளையும், வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச்செல்ல தேவையான உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான உணவு வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ குழு 108 அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தபால் வாக்குகளை முறையாக எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திட
வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாகனம் நிறுத்தும் இடம், அறிவிப்பு பலகை,
ஒலிப்பெருக்கி, கைபேசி வைக்கும் இடம் ஆகியவற்றை ஏற்படுத்திட வேண்டும். செய்தியாளர்களுக்கான ஊடக மையம், செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க தேவையான ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி வாக்கும் எண்ணும் பணியினை முழுவதும் பதிவு செய்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகள், வாக்கு எண்ணும் முறை உள்ளிட்டவை குறித்து உரிய பயிற்சிகள் வழங்கிட வேண்டும். கட்டுப்பாட்டு அறை, தயார் நிலையில் உள்ள அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முழு ஈடுபாட்டோடு வாக்கு எண்ணும் பணிகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உம தெரிவித்தார்.