239 பேருடன் மாயமான விமானம்... 10 வருடத்திற்குப் பின் மீண்டும் தேடுதலை தொடங்கும் மலேசிய அரசு!!
239 பேருடன் மாயமான விமானத்தை 10 வருடத்திற்குப் பின் மலேசிய அரசு மீண்டும் தேட தொடங்கியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன. மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது, இதுவரை கிடைத்த சாட்டிலைட் தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், MH370 விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. MH370 விமானத்துக்கு என்ன நடந்திருக்கும் என்ற பலவாறாக யூகங்கள் கான்சபைரஸி தியரிக்கள் கூறப்பட்டு வருகிறன. இந்நிலையில் காணாமல் போன MH370 விமானத்தின் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா திட்டமிட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். கடல்சார் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டியின் புதிய தேடுதல் நடவடிக்கைக்கு மலேசியா ஒப்புக்கொண்டதாக அந்தோனி லோக் கூறினார். அமெரிக்காவை தளமாக கொண்ட இதே நிறுவனம் 2018 இல் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தெற்கு இந்தியப் பெருங்கடலின் இதற்கு முன் தேடுதல் நடத்தாத புதிய 15,000 சதுர கிலோமீட்டர் (5,800 சதுர மைல்) பகுதியில் தேடுதல் நடந்த இந்த நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தேடுதலுக்கு மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு நிதியாக $70 மில்லியன் வழங்க உள்ளது. புதிய தேடல் பகுதியில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் தரவுகளை ஓஷன் இன்ஃபினிட்டி அரசிடம் சமர்பித்திருந்த நிலையில் தற்போது இந்த தேடுதல் பணிக்கு ஒப்புதல் வழங்கும் வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பிட்ட இந்த கடல் பகுதியில் தேடுவதற்கு ஏற்ற நேரம் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்டதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதால் ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.