ரூ.2100 கோடி லஞ்சம்: அதானி குழும வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பு!!
அதானி குழும வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார். இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.