ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு; டிரம்புக்கான தண்டனை விவரம் 10-ந்தேதி அறிவிப்பு!!

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கான தண்டனை விவரம் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Update: 2025-01-04 07:00 GMT

Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் போட்டியின்போது தேர்தல் நிதியில் இருந்து ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. டிரம்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்தார். இதனால் தனது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதுபற்றி பேசாமல் இருக்க நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இத்தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்தார். ஆனால் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மனுவை விசாரித்த நீதிபதி மெர்ச்சன் கூறும் போது, டிரம்ப் குற்றவாளி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவரது தண்டனை விவரம் குறித்து ஜனவரி 10-ந்தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராக பதவியேற்க 10 நாட்களுக்கு முன்பு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளையில் டிரம்ப் புதிய அதிபராக தேர்வாகி இருப்பதால், சிறை தண்டனை இல்லாமல், அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டிரம்ப் அதிபராக பதவியேற்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் வரலாற்றில், குற்ற வழக்குடன் ஒருவர் அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News