லெபனான் முழுவதும் பதற்றம்; பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு!!

லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

Update: 2024-09-19 13:10 GMT

Lebanon

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே லெபனானில் நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்து சிதறியது. ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 2800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில் உள்ள பேட்டரியில் வெடிமருந்தை கலந்து இஸ்ரேல் வெடிக்க வைத்ததாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது. பேஜர் வெடித்து சிதறியதில் பலியான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 3 பேர் மற்றும் ஒரு குழந்தையின் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வைத்திருந்த வாக்கி-டாக்கிகள் வெடித்தது. அதேபோல் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது. இதில் பலர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீடுகளில் இருந்த சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறும்போது, நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து உள்ளோம். அதற்கு எங்களிடமிருந்து தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை என்றார். இவரது இந்த கருத்து லெபனான் மீதான தாக்குதல் சம்பந்தமானதா என்பது உறுதி செய்யப்பட வில்லை. லெபனானில் நடந்த பேஜர் வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது.

Tags:    

Similar News